பல பகுதிகளில் 100 மி.மீட்டர் வரை மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும்

by Staff Writer 01-11-2021 | 2:38 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இன்றும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று (01) காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தின் வேவல்தலாவ பகுதியில் 240 மி.மீ மழை வீழ்ச்சியும் காலி - ஹினிதும பகுதியில் 143.7 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையால் பல தாழ்நில பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். பண்டாரவளை - தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மார்க்கத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பதுளையிலிருந்து பண்டாரவளை வரையான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்மேட்டினை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த மழையினால், கெபெல்லவத்த பகுதியின் இறம்புக்கனை - மாவனெல்ல பிரதான வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மழை காரணமாக எல்ல - ஹல்பவத்த பகுதியில் குடியிருப்பு தொகுதி மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் 12 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக எல்ல பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பலத்த மழையினால், நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகளும் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் கலா வாவியின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பீ.சி. சுகீஷ்வர தெரிவித்தார்.