by Staff Writer 28-10-2021 | 8:06 PM
Colombo (News 1st) இராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய நுவரெலியா - சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட புனித சின்னம், இந்தியாவின் அயோத்தியிலுள்ள ஶ்ரீ ராமர் ஆலயத்தில் இன்று (28) கையளிக்கப்பட்டது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்தப் புனித சின்னத்தை உத்தியோகபூர்வமாக அயோத்தி ஶ்ரீ ராமர் கோயில் நிர்வாகத்தினரிடம் இன்று ஒப்படைத்தார்.
நுவரெலியா - சீதா எலிய சீதையம்மன் கோவிலின் புனர் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு புனித சின்னமாக பூஜிக்கப்பட்ட கல் ஒன்றையே இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இன்று இந்தியாவின் அயோத்தி ஶ்ரீ ராமர் ஜென்ம பூமியில் அமைக்கப்பட்டு வருகின்ற ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக கையளித்துள்ளார்.
அயோத்தி ஶ்ரீ ராமர் ஜென்ம பூமியின் தலைமை பூசகர் ஸ்வாமி சத்யேந்திரா தாஸு இந்த புனித சின்னத்தை பொறுப்பேற்று வழிபாடுகளை நடத்தினார்.
நுவரெலியா - சீதா எலிய ஆலயத்தில் நீண்ட காலமாக வைக்கப்பட்டிருந்த இந்த புனித சின்னம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வௌ்ளவத்தை மயூராபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இராமாயணத்துடன் தொடர்புடைய ராமர் ஜென்ம பூமியான அயோத்திக்கும் சீதை சிறை வைக்கப்பட்ட நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கும் இடையிலான தொடர்பு இந்த செயற்பாட்டின் ஊடாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ராமர் ஜென்ம பூமி அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திருப்பணிக்கான பூமி பூஜை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்றது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் நண்பகல் சுபவேளையில் ராமர் கோயிலுக்கான வௌ்ளியினாலான அடிக்கல்லை நாட்டினார்.