COVID தொற்றுக்குள்ளாகி வீடுகளில் சிகிச்சை பெறும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க திட்டம்

by Bella Dalima 14-10-2021 | 5:09 PM
Colombo (News 1st) COVID தொற்றுக்குள்ளாகிய நிலையில் வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடு பெற்றுக்கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை கூறியுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரச ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் திட்டம் 2021 வரவு செலவு திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அரச சேவையை செயற்திறன் மிக்கதாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து தொழிற்சங்கத்தினர் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக பிரதமர் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களத்தின் கொள்முதல்களில் காணப்படும் சில முறைகேடுகள் தொடர்பிலும் இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர். COVID தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழலில் அரச நிறுவனங்களின் செலவுகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், புகையிரத திணைக்களத்தினுள் காணப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயுமாறும் குறிப்பிட்டுள்ளார்.