by Bella Dalima 13-10-2021 | 6:50 PM
Colombo (News 1st) அதிபர் ஆசிரியர் சம்பள அதிகரிப்பை ஒரே தடவையில் வழங்குமாறு வலியுறுத்தி, தமது போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல தொழிற்சங்கங்கள் இன்று தீர்மானித்துள்ளன.
தமது சம்பள பிரச்சினை தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பிரதமர் உள்ளிட்டோருடன் மூன்றரை மணித்தியாலம் கலந்துரையாடல் இடம்பெற்றாலும், திறைசேரி செயலாளர், வரவு செலவு பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இடைக்கிடையே குறுக்கிட்டு பேசி, தாமதப்படுத்தி தீர்மானத்திற்கு வருவதை தடுத்ததாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
முதலாவது கட்டத்தை உத்தேச சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியாகவும் மிகுதி இரு கட்டங்களையும் 2023 ஆம் ஆண்டு வழங்கவும் உத்தேசித்திருப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், அதனை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை, பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் பாடசாலைக்கு செல்வதா, இல்லையா என்பதை கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பஞ்ஞாசேகர தேரர் தெரிவித்தார்.