by Staff Writer 03-10-2021 | 3:41 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று இலங்கை வரவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தாருடன் நவராத்திரி விழாவில் பங்கேற்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையின் பாதுகாப்பு படைகளை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்கும் நிகழ்வொன்றில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்பது ராஜபக்ஸ ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி வார இறுதி பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் இலங்கை நெருக்கம் கொண்டிருப்பதாக கூறப்படுகின்ற உணர்வுப்பூர்வமான விடயங்கள் அனைத்தும் தற்போது மீளவும் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் கடந்த ஆட்சியாளர்கள் சீனாவுடன் சாய்ந்திருந்த நிலைமைகள் தற்போது காணப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய இலங்கை உறவுகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான பாதை வரைபடமொன்றை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட உருவாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.