இலங்கைக்கு உதவ விரும்பும் தென்னாபிரிக்கா

இலங்கை - தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடல்

by Staff Writer 26-09-2021 | 10:37 PM
Colombo (News 1st) உள்ளூர் கலாசாரத்தில் வேரூன்றிய நல்லிணக்கம் குறித்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது அமர்வின் பக்க நிகழ்வாக, நியூயோர்க்கில் உள்ள தென்னாபிரிக்காவின் நிரந்தர தூதரகத்தில் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பண்டோரை வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் சந்தித்தார். வளமான அனுபவம், நல்லிணக்கம் மற்றும் உண்மை ஆகிய துறைகளிலான தனித்துவமான தென்னாபிரிக்காவின் வரலாற்றை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமைச்சர் G.L.பீரிஸ் இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இலங்கையின் முயற்சிகள், காணாமற்போனோர் அலுவலகம், இழப்பீடு வழங்கும் அலுவலகம், மோதலுக்குப் பிந்தைய அபிவிருத்தி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான பங்களிப்பு குறித்தும் அமைச்சர் தௌிவுபடுத்தியுள்ளார். தமது அனுபவங்களையும் பாடங்களையும் மோதலுக்கு பிந்தைய பிரச்சினைகளை தீர்க்க விரும்பும் நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதில் தென்னாபிரிக்கா மகிழ்ச்சியடைவதாக தென்னாபிரிக்க வௌிவிவகார அமைச்சர் பண்டோர் கூறியுள்ளார்.