by Staff Writer 16-09-2021 | 4:53 PM
Colombo (News 1st) தெமட்டகொடையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கல்வீச்சு மேற்கொண்ட சந்தேகநபர்கள் நால்வரும் போதைப்பொருளுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் சுற்றிவளைப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (15) மாலை சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இதன்போது, 10 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்ததன் பின்னர், அவரின் நெருங்கிய சிலர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கல்வீச்சு மேற்கொண்டு சந்தேகநபரை தப்பவைக்க முயற்சித்துள்ளனர்.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வீச்சில் காயமடைந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று பொரளை சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.