by Staff Writer 08-09-2021 | 8:23 PM
Colombo (News 1st) கொவிட் 19 ஒழிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன இராஜினாமா செய்துள்ளார்.
தொடர்ந்தும் கொவிட் தொழில்நுட்ப குழுவில் இருப்பது தமக்கும் குறித்த குழுவுக்கும் எவ்வித பயனும் இல்லை என கருதியதால் தாம் இராஜினாமா செய்தாக விசேட வைத்திய நிபுணர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜயவிக்ரம நேற்று (07) இராஜினாமா செய்திருந்தார்.
கொவிட் தொழில்நுட்ப குழு என்றால் என்ன?
கொவிட் கட்டுப்பாடு தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார செயலாளருக்கு பரிந்துரைகளை முன்வைப்பது இந்த குழுவின் பணியாகும்.
கொவிட் தொற்று பரவ ஆரம்பித்த காலப்பகுதியில் இந்த குழு மிகவும் சிறப்பாக செயற்பட்டதோடு தனிமைப்படுத்தல், இடைநிலை மத்திய நிலையங்கள் மற்றும் விஞ்ஞான பூர்வமான தீர்மானங்களுக்கு காணப்பட்ட தடைகளுக்கான மாற்று வழிகள் தொடர்பாகவும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது.
சுகாதாரத்துறையின் பல்வேறுபட்ட விசேட நிபுணர்கள் இந்த குழுவில் உள்ளடங்கியுள்ளதோடு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
தமது பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலை காண்படுவதாக கொவிட் ஒழிப்பு குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் நாம் வினவிய போது தெரிவித்தனர்.
விசேடமாக தடுப்பூசி ஏற்றும் போது முன்னுரிமை வழங்க வேண்டியவர்கள் தொடர்பில் தாம் முன்வைத்த சிபார்சுகளை கவனத்திற்கொள்ளாத நிலைமை காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு மாத காலமாக இந்த குழு கூடவில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.