by Bella Dalima 04-09-2021 | 9:25 PM
Colombo (News 1st) Government Cloud எனப்படும் இலங்கை அரசாங்கத்தின் தரவுத்தளத்தில் இருந்த 5,623 அத்தாட்சி ஆவணங்கள் அழிவடைந்துள்ளதை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஏற்றுக்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.
Government Cloud எனப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் தரவுத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் தன்னியக்க தரவுக்கட்டமைப்பு கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி அழிவடைந்தது.
இரகசியத்தன்மை பேணப்பட வேண்டிய இந்த தரவுகள் அழிவடைந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனிடையே, ஆளும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கு சென்று நேற்று விடயங்களை ஆராய்ந்தது.
பின்னர் அவர்கள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி தாம் உறுதிப்படுத்திக்கொண்ட தகவல்களை வௌியிட்டனர்.
குறித்த தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் போதுமான அளவு கரிசனை செலுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை அவதானிக்க முடிந்ததாகவும் Backup ஒன்றுக்கான ஏற்பாடுகள் இருக்கவில்லை எனவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
5,623 கோப்புகள், சார்பு ஆவணங்கள் மற்றும் அத்தாட்சி ஆவணங்கள் என்பனவே அழிவடைந்துள்ளதாகவும் COVID தரவுகள் Manual ஆக உள்ளடக்கப்படுவதால், அவை அழியவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், NMRA-இனால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற, இந்த தரவுகள் அழிந்த விடயத்தில் அரசாங்கம் நிரபராதி எனவும் இதனை உருவாக்கியவர்களே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த காலங்களில் ஒரு சில தரவுகள் இந்த கட்டமைப்பிற்கு வௌியே பதிவேற்றம் செய்யப்பட்டதாக வௌியான கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கட்டமைப்பிற்கு வௌியே Manual ஆக பதிவேற்றப்பட்ட COVID தொடர்பான தரவுகள் வௌிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறான தீர்மானம் எட்டப்பட்டிருக்கலாம் என சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க கூறினார்.