ஜப்பான் பிரதமர் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு

ஜப்பான் பிரதமர் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு

by Bella Dalima 03-09-2021 | 1:42 PM
Colombo (News 1st) ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இம்மாதம் 29 அம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார். சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் சின்ஷோ அபே பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, யோஷிஹிடே சுகா பிரதமராக நியமிக்கப்பட்டார். யோஷிஹிடே சுகாவின் ஆட்சி தொடர்பில் அதிருப்தி நிலவி வந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். COVID தொற்று காரணமாக ஜப்பானில் டோக்யோ உட்பட சில நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை விடுத்து COVID ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாய குடும்பப் பின்னணியைக் கொண்ட 72 வயதான யோஷிஹிடே சுகா 1987 ஆம் ஆண்டு யொகோஹாமா நகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996 இல் முதன்முறையாக அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 2005 ஆம் ஆண்டு வௌிவிவகாரத்திற்கான சிரேஷ்ட துணை அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2007 இல் மூன்று அமைச்சுகள் அவரிடம் கையளிக்கப்பட்டன. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அந்நாட்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.