by Staff Writer 30-08-2021 | 10:40 PM
Colombo (News 1st) தமது உறவுகள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற ஏக்கத்துடன் ஏராளமானோர் இன்று வரை காத்திருக்கின்றனர்.
அவ்வாறான சூழ்நிலையிலேயே இலங்கையிலும் இன்று (30) சர்வதேச காணாமற்போனோர் தினம் நினைவுகூரப்படுகிறது.
அடையாளம் தெரியாத இடங்களில் தடுத்துவைத்தல், உறவினர்களுக்கு அறிவிக்காமல் அல்லது பல்வேறு சட்டங்களின் படி கைது செய்யப்பட்டு பின்னர் காணாமற்போன மக்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக சர்வதேச காணாமற்போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு கொஸ்டெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் காணாமற்போனவர்களின் உறவினர்கள் அமைப்பினால் காணாமற்போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
காணாமற்போன மக்களின் பாதுகாப்பிற்கான கொள்கைப் பிரகடனம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது.
சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்றும் வடக்கு, கிழக்கில் உள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமக்கு நீதியான விசாரணை அவசியம் என கூறி ஊடக சந்திப்புக்களையும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
காணாமல் போன தமது உறவினர்கள் தொடர்பில் இதுவரை தமக்கு எவ்வித தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட காணாமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கொவிட் சூழ்நிலை காரணமாக வீடுகளில் இருந்தவாறே எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா - சிறிராமபுரம் கிராமத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.