யாழில் இதுவரை மீள குடியமர்த்தப்படாதோர் தமது விபரங்களை அனுப்பிவைக்குமாறு மாவட்ட செயலகம் அறிவிப்பு

by Staff Writer 29-08-2021 | 1:18 PM
Colombo (News 1st) முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் இதுவரை மீளக் குடியமர்த்தப்படாத குடும்பங்கள் தங்களின் விபரங்களை விரைவாக அனுப்பிவைக்குமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. தனியார் காணிகளை முப்படையினர் மற்றும் பொலிஸார் பயன்படுத்துவதன் காரணமாக, இதுவரை மீளக் குடியமர்த்தப்படாத குடும்பங்கள் தங்களின் விபரங்களை விரைவாக அனுப்பி வைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. காணி உரிமையாளர்கள் யாழ். மாவட்டத்தில் தற்போது வசிப்பவர்களாக இருந்தால், அது தொடர்பான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காணி உறுதியின் பிரதிகளுடன் தமது கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலகத்தில் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏற்கனவே மீளக் குடியமர்த்தப்பட்ட போதிலும் ஏதேனும் காணி, பாதுகாப்பு தரப்பினரின் பாவனையில் இருப்பின் அதற்கான விண்ணப்பத்துடன் காணி உறுதியின் பிரதிகளுடன் தமது கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தலுடன் தற்போது வசிக்கும் பிரதேச செயலகத்தில் கையளிக்குமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நீண்ட காலமாக முகாம்களில் வாழும் மக்கள் தமது பிரச்சினைக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோருகின்றனர். இதனிடையே, யாழ். மாவட்டத்திற்கு வௌியே வசிப்பவர்களாயின் அதற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட செயலாளர், மீள்குடியேற்றப்பிரிவு, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அல்லது தகவல் படிவம் மற்றும் உறுதி ஆவணங்களின் பிரதிகளை ஸ்கேன் செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு மாவட்ட செயலகம், மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கும் யாழ். மாவட்ட செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த காணி உரிமையாளர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகள், விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து காணி உறுதியின் பிரதிகளை மாவட்ட செயலாளர், மீள்குடியேற்றப்பிரிவு, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அல்லது தகவல் படிவம் மற்றும் உறுதி ஆவணங்களின் பிரதிகளை ஸ்கேன் செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் மாவட்ட செயலகம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.