by Staff Writer 23-08-2021 | 7:07 PM
Colombo (News 1st) இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் உணர்ச்சிபூர்வமாக தீர்மானம் எடுக்க முடியாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சட்டத்திற்குட்பட்டே தீர்மானங்களை எடுக்க முடியும் என இந்திய மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அகதிகளுக்கான குடியுரிமை வழங்குவது தொடர்பில் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், குறித்த மனுவிற்கு எதிராக இந்திய அரசு தரப்பில் மற்றுமொரு எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கு உரியவாறு அறிவித்தல் கிடைக்காமையால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் குழாம் ஒத்திவைத்துள்ளது.
மூன்று வாரங்களுக்கு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி - கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலரால் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரி, 2009 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணை செய்த நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
நிலுவையிலுள்ள இந்த வழக்கிற்கு எதிராகவே இந்திய அரசினால் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைச்சாமி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.