5 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

by Staff Writer 12-08-2021 | 4:36 PM
Colombo (News 1st) மத்திய மலைநாட்டில் பெய்யும் பலத்த மழை வீழ்ச்சியினால் லக்‌ஷபான, கெனியன், மவுசாகலை, விமலசுரேந்திர, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதனால் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தில் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு கடும் மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.