சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிற்கு தடை

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கிற்கு தடை

by Bella Dalima 07-08-2021 | 3:11 PM
எயார் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி ‘சூரரைப் போற்று’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்தாண்டு வௌியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். அதேபோல், சூர்யாவின் 2D நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கிற்கு தடை கோரி சிக்யா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த குனீத் மொங்கா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழில் சூர்யாவின் 2D நிறுவனத்துடன் இணைந்து சூரரைப் போற்று படத்தை தயாரித்ததாகவும், இந்தி ரீமேக் உரிமையை விற்றதில், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் சூர்யா தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் குனீத் மொங்கா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும் இரு தரப்பினரும் நட்பு ரீதியாக கலந்துபேசி இந்த விடயத்தில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.