by Staff Writer 02-08-2021 | 4:03 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று (02) பிற்பகல் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் நிராகரித்தார்.
எதிர்ப்பில் ஈடுபடும் எவரேனும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை மீறுவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளதாக பிரதம நீதவான் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உரிமையை பறிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியினூடாக நாடும் அரசாங்கமுமே அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் என நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிரான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரமவின் தலைமையிலான மக்களுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.