by Staff Writer 18-07-2021 | 8:08 PM
Colombo (News 1st) தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் COVID - 19 தடுப்பூசியேற்றல் தொடர்பான நிபுணர் குழுவின் மூன்று உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, சீனாவில் தயாரிக்கப்பட்ட Sinovac தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர் இவர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
08 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவிலிருந்து, வைத்தியர் ரஜிவ டி சில்வா, வைத்தியர் காந்தி நானாயக்கார மற்றும் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே இவ்வாறு இராஜினாமா செய்துள்ளனர்.
சீன தயாரிப்பான Sinovac தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அந்த தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதியளித்துள்ளமையே தாம் இராஜினாமா செய்வதற்கு காரணம் என இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொவிட் 19 டெல்டா பிறழ்விற்கு மத்தியில், Sinovac தடுப்பூசி போதிய பலனளிக்காத தடுப்பூசி என கொவிட் 19 தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Sinovac தடுப்பூசி இரு தடவைகள் ஏற்றப்பட்டு 06 மாதங்களின் பின்னர் மூன்றாவது தடுப்பூசியும் ஏற்றப்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.