வெலிக்கடை சிறைக்கைதிகளின் ஆர்ப்பாட்டம் நிறைவு

வெலிக்கடை சிறைக்கைதிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிறைவு

by Staff Writer 26-06-2021 | 9:45 PM
Colombo (News 1st) கைதிகள் சிலர் வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்தின் கூரையின் மீது ஏறி ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்று (26) முடிவுக்கு வந்தது. தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தமது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு வலியுறுத்தி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இதேவேளை சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. உலக கைதிகள் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிறைக்குள் வைத்திருக்கும் சிறைக் கைதிகளுக்காக இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும். நீண்ட காலமாக சிறையில் வைத்திருக்கும் நபர்கள் ஒரு சிலருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருந்தாலும் கூட பொது மன்னிப்பு நேற்று வழக்கப்படவில்லை. இந்த வகையில் நாங்கள் கேட்பது இலங்கையில் அரசியல் கைதிகள் எத்தனையோ பேர் உள்ளார்கள். இந்த அரசியல் கைதிகளில் 16 பேர் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். ஏன் அந்த மிச்ச 31 பேர் நீங்கள் விடுதலை செய்யவில்லை. தமிழ் கைதிகளுக்கு நீங்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி எவ்வளவு இளைஞர்களை கடந்த ஒருவருடத்திற்குள் கைது செய்துள்ளார்கள். அந்த வகையில் பயங்கரவாத தடை சட்டம் நீக்க வேண்டும்
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.