உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்து

by Bella Dalima 16-06-2021 | 5:17 PM
Colombo (News 1st) எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடப்பட்டது. அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலையை அதிகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்த போது அதன் பலன்களை பொதுமக்களுக்கு வழங்காமை, அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்படும் என மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை, எரிபொருள் விலையை நிலையாக பேணுவதற்குரிய நிதியத்திற்கு என்ன நடந்தது என்பதை மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் அறிவிக்க தவறியமை உள்ளிட்ட 10 விடயங்களை உள்ளடக்கி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
பிரேரணை எனக்கு கிடைத்தது. கையொப்பமிடும் சந்தர்ப்பத்திலேயே உறுப்பினர் ஒருவர் எனக்கு பிரதி அனுப்பியிருந்தார். அதிலிருக்கும் குறைபாடுகளை எதிர்காலத்தில் நாட்டிற்கு தெளிவுபடுத்துவேன். காய்க்கும் மரமே கல்லடி படும். நாட்டு மக்கள் என்னைப் பற்றி கூறும் விடயங்கள், எனது சக அமைச்சர்கள் என்னைப் பற்றி கூறும் விடயங்கள், ஜனாதிபதியும், பிரதமரும் என்னைப் பற்றி கூறுபவற்றை சாகர காரியவசத்தின் அறிவிப்புடன் புரிந்துகொண்டேன். அத்தகையதொரு அறிவிப்பை விடுத்து என்னுடைய பலத்தை உணரவைத்தமைக்கு சாகர காரியவசமே உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். உண்மையில் சாகர காரியவசத்தை சிரமத்திற்குள் ஆழ்த்தும் நோக்குடனேயே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்