by Staff Writer 03-06-2021 | 10:32 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மேலும் 39 பேர் உயிரிழந்ததாக நேற்று (02) அறிவிக்கப்பட்டது.
மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் ஜுன் முதலாம் திகதி வரையான காலப் பகுதியில் இவர்கள் உயிரிழந்ததாக அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 12 நாட்களில் முதற்தடவையாக நேற்று மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
25 மாவட்டங்களிலிருந்தும் நேற்று பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,306 ஆகும்.
மே மாதம் 14 ஆம் திகதி பயணத் தடை அமுல்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 1, 32,773 ஆக பதிவாகியிருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் 26,116 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பயணத் தடைக்கு மத்தியில் 26 ஆம் திகதி வெசாக் வாரம் ஆரம்பமான போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,66,947 ஆக அதிகரித்தது.
மே மாதம் 14 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் அது 34, 174 நோயாளர்கள் அதிகரிப்பாகும்.
வெசாக் வாரமாகும் போது 43, 444 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றனர்.
பயணத் தடை அமுலுக்கு வந்த நாளுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 17,328 ஆல் அதிகரித்துள்ளது.
இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 1,95, 169 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவோரின் எண்ணிக்கையும் ஐம்பதாயிரத்தை கடந்துள்ளது.
பரிசோதனைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு பயணத் தடை விதிக்கப்பட்ட காலப் பகுதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தமை தெரிகிறது.
மே மாத ஆரம்பத்தில் 18,584 ஆக இருந்த PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 14 ஆம் திகதி பயணத் தடை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் 24, 451 ஆக அதிகரித்தது.
எனினும், மே மாதம் 26 ஆம் திகதி 20,193 PCR பரிசோதனைகளே நடத்தப்பட்டிருந்தன.
நேற்று (02) அந்த எண்ணிக்கை 19 , 314 ஆக குறைவடைந்துள்ளது.