by Staff Writer 01-06-2021 | 10:39 PM
Colombo (News 1st) எதிர்வரும் பெரும்போகத்திற்குத் தேவையான சேதனப் பசளையை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2021 - 2022 பெரும்போக நெல் விளைச்சலுக்காக 5 இலட்சம் ஹெக்டேயர் நெற்செய்கை காணிக்கான சேதனப் பசளையை, சர்வதேச விலை மனு கோரலுக்கு அமைய அரசுக்கு சொந்தமான உர நிறுவனத்தினூடாக இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உரத்தை, கமநல சேவை திணைக்களத்தினூடாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர, ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான 6 இலட்சம் விவசாய காணிகளுக்குத் தேவையான சேதனப் பசளையை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களூடாக உரத்தை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சேதனப் பசளை பயன்பாட்டிற்கு உரிய முறைமை பின்பற்றப்படாவிட்டால், பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம் என இலங்கை மணல் சார் ஆய்வு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரிசி மற்றும் தேயிலை உற்பத்திக்கு மாத்திரம், வருடத்திற்கு 11.5 மில்லியன் தொன் உரம் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டும் இந்த சங்கம், உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளமையினால், இறக்குமதி செய்யும் போது பல பிரச்சினைகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஒழுங்குபடுத்தல் முறையொன்று இல்லாமல், சேதனப் பசளைகளை கொண்டு வருவதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் இலங்கை மணல் சார் ஆய்வு சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.