குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்

7 பேரின் விடுதலையை குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் கடிதம்

by Bella Dalima 21-05-2021 | 3:57 PM
Colombo (News 1st) கொரோனா காலகட்டமான இக்கட்டான சூழலில் 7 பேரின் விடுதலை கோரிக்கையை குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக அமைச்சரவையில் 2018 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையை முதல்வர் ஸ்டாலின் நினைவுபடுத்தியுள்ளார். கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, சிறையில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கைதிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆகவே, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்று, ஆணை பிறப்பிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சென்னைக்கு அருகில் உள்ள திருப்பெரும்புதூரில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரும் 1991 ஆம் ஆண்டிலிருந்து சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.