எவரும் இனப்படுகொலை செய்ய போருக்கு செல்லவில்லை: பிரதமர் தெரிவிப்பு

by Bella Dalima 18-05-2021 | 8:32 PM
Colombo (News 1st) 30 வருட யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் 12 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை நிகழ்த்தினார். இதன்போது, போருக்கு சென்ற எவரும் இனப்படுகொலை செய்ய செல்லவில்லை என பிரதமர் தெரிவித்தார். அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்க ஆகியோர் இனப்படுகொலை நிகழ்த்துவதற்காக தங்களது படைகளை வழிநடத்தியவர்கள் அல்லவென பிரதமர் சுட்டிக்காட்டினார். வடக்கின் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி போராடிய காட்டுமிராண்டித்தனமான குழுவிற்கு எதிராகவே அவர்கள் போராடியதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். அன்று இராணுவத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கடினமான சவாலை அவர்கள் எதிர்கொண்டு வென்றதாகவும் இன்று பெருந்தொற்றிலிருந்து நாட்டை மீட்க போராடி வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். நாட்டிற்கும் தேசத்திற்கும் துரோகம் செய்யும் சக்திகள் அன்று போரில் தமக்கு எதிராக இருந்ததை போன்று, இன்றும் தொற்றுக்கு எதிராக முப்படையினரை ஈடுபடுத்துவதனை எதிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.
இராணுவத்தினருக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் இணை அனுசரணையாளர் என்ற துரோக தீர்மானத்திலிருந்து நாம் விலகினோம். உங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கவும் நாட்டிற்கு அமைதியைக் பெற்றுக்கொடுக்கவும் இராணுவத்தினர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். எனவே, எவ்வாறான சவால் மிகுந்த தருணத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்து பெற்றுக்கொண்ட வெற்றியைக் காட்டிக் கொடுக்க மாட்டோம். எமக்கு இந்த நாடே பெறுமதிவாய்ந்தது
என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தமது விசேட உரையில் குறிப்பிட்டார்.