பயணக் கட்டுப்பாடுகள், NIC வைத்திருப்பதன் அவசியம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தௌிவூட்டல்

by Bella Dalima 12-05-2021 | 5:30 PM
Colombo (News 1st) நாளை (12) முதல் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நபர்களின் நடமாட்டம் மற்றும் வாகன நடமாட்டம் என்பன மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். எனினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கும் சுகயீனமுற்று வைத்தியசாலைகளுக்கு செல்வோருக்கும் பொருந்தாது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தௌிவுபடுத்தினார். தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை நாளை (13) முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தேசிய அடையாள அட்டையை இலங்கையர்கள் வைத்திருப்பது அவசியம் எனவும் அவ்வாறில்லாவிட்டால் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் அஜித் ரோஹன வலியுறுத்தினார். தேசிய அடையாள அட்டையில் 2, 4, 6, 8, 0 எனும் இரட்டை இலக்கங்களை இறுதி இலக்கமாகக் கொண்டவர்கள் இரட்டை இலக்க தினத்திலும் 1, 3, 5, 7, 9 ஆகிய ஒற்றை இலக்கங்களை இறுதி இலக்கமாகக் கொண்டவர்கள் ஒற்றை இலக்க தினத்திலும் வீடுகளில் இருந்து வௌியேற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கினார். எவ்வாறாயினும், தொழில் நிமித்தம் வீடுகளில் இருந்து வௌியேறுவோர், தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 31 ஆம் திகதி வரை யாத்திரைகள், சுற்றுலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மரணம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதுடன், மரண வீடுகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இதேவேளை, திருமண நிகழ்வுகளுக்கு மே 31 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவுகளில் பதிவாளர் உட்பட 15 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை (13) இரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி காலை 4 மணி வரை நாடு முழுவதும் தொடர் பயணத் தடை (பகல் வேளையிலும்) விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த நாட்களில் நாட்டின் எப்பகுதியிலும் பகல் வேளை அடங்கலாக பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.