அதிக தொகைக்கு அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும் 

சேதனப் பசளையால் வருமானம் குறைந்தால் அதிக தொகைக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 12-05-2021 | 5:01 PM
Colombo (News 1st) சேதனப் பசளையை பயன்படுத்துவதால் விளைச்சல் குறைந்து வருமானத்தில் மாற்றம் ஏற்பட்டால், உத்தரவாத விலையை விட அதிக தொகைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நுகர்வோருக்கு நடைமுறையில் உள்ள விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அதற்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இயற்கை உரங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால், அதற்கு தேவையான வசதிகளை வழங்க அரசு தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவது தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். எதிர்கால தலைமுறையைக் கட்டியெழுப்புவதற்காகவே சேதனப் பசளை பயன்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.