உயிரிழந்த படைவீரர்களின் மனைவிமாருக்கு கொடுப்பனவு

உயிரிழந்த பொலிஸ் மற்றும் படைவீரர்களின் மனைவிமாருக்கு ஆயுட்கால கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 29-04-2021 | 5:00 PM
Colombo (News 1st) பொலிஸ் மற்றும் முப்படையில் உயிரிழந்த உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அவர்களின் மனைவிகளுக்கு ஆயுட் காலத்திற்கும் செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் பாதுகாப்பு பிரிவினரின் மனைவிமார்களால் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். இதேவேளை, யுத்த காலத்தில் உயிரிழந்த திருமணமாகாத உறுப்பினர்களுக்காக, அவர்களின் பெற்றோர்களுக்கு மாதாந்தம் 25,000 ரூபா கொடுப்பனவு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல், யுத்தத்தால் அங்கவீனமுற்று சேவையிலிருந்து விலகியுள்ள முப்படை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை, அவர்கள் இறந்த பின்னர் குடும்பத்தில் தங்கி வாழ்வோருக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கூறினார். யுத்த காலத்தை தவிர்ந்த ஏனைய சுற்றிவளைப்பின் போது அங்கவீனமுற்ற படையினர் தொடர்பில் விசேட குழுவினூடாக ஆராய்ந்து நிவாரணங்களை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.