by Staff Writer 24-04-2021 | 10:28 PM
Colombo (News 1st) புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மன்னாரிலுள்ள தீவுகளில் கனிம ஆய்வுகளை மேற்கொள்ள நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்ட 5 தேசிய நிறுவனங்களுக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கிய 9 ஆய்வு அனுமதிப்பத்திரங்கள் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் கீழ் சென்றமை குறித்து நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தது.
அவற்றில் 8 அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நேற்று முன்தினம் (22) தெரிவித்தது.
குறித்த விடயம் தொடர்பாக அறிவுறுத்தப்படாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
9 அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி மன்னாரிலுள்ள தீவுகளில் 265 மெட்ரிக் தொன் கனிமம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்ததுடன் அதனை சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அவுஸ்திரேலியாவின் Titanium Sands நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
9 ஆய்வு அனுமதிப்பத்திரங்களையுடைய 5 நிறுவனங்களையும் மொரிசியஸில் இருக்கும் இரண்டு நிறுவனங்களின் கீழ் கொண்டு வரும் செயற்பாடே முதலில் இடம்பெற்றுள்ளது.
அதன் பின்னர் அவுஸ்திரேலியாவின் Titanium Sands நிறுவனம் மொரிசியஸின் குறித்த நிறுவனங்கள் இரண்டையும் கைப்பற்றியது.
இவ்வாறு கையகப்படுத்தப்படும் போது அது குறித்து புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு அறிவிக்க வேண்டியது தேசிய நிறுவனங்களின் பொறுப்பாகும்.
தேசிய வளங்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் தொடர்ச்சியாக முன்நிற்கும் நியூஸ்ஃபெஸ்ட் இந்த கொடுக்கல் வாங்கல் குறித்தும் ஆரம்பத்திலேயே வௌிக்கொணர்ந்தது.
குறித்த 5 தேசிய நிறுவனங்களும் வௌிநாட்டு நிறுவனங்கள் இரண்டினால் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதையும், அது புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு அறிவிக்கப்படவில்லை என்றும் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.
அவ்வாறு செய்தி வெளியிட்ட பின்னர் இது குறித்து ஆராய்ந்து பார்க்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர சுற்றாடல் அமைச்சின் செயலாளர் குழுவொன்றை நியமித்தார்.
அந்தக் குழு வழங்கிய பரிந்துரையை அடுத்தே ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறித்த 9 ஆய்வு அனுமதிப்பத்திரங்களில் 8-ஐ இரத்து செய்தது.
அவுஸ்திரேலியாவின் Titanium Sands நிறுவனம் அந்நாட்டு பங்குச்சந்தையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.