நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 20-04-2021 | 1:50 PM
Colombo (News 1st) சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சீரற்ற வானிலையால் கம்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தங்கும் விடுதி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது. கம்பளையில் சில நாட்களுக்கு முன்னர் கடும் மழையுடனான வானிலை நிலவியது. இதனால் இன்று காலை 5 மணியளவில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தங்கும் விடுதி மீது மரம் முறிந்து வீழ்ந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், விடுதியின் கூரையும் சில பொருட்களும் சேதமடைந்துள்ளன. இந்தநிலையில், மரத்தை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.