by Staff Writer 19-04-2021 | 6:42 PM
Colombo (News 1st) உலக திருமதி அழகி கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று (19) உத்தரவிட்டார்.
இவர்கள் இருவரும் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் பகிரங்க திருமதி அழகியை தெரிவு செய்யும் போட்டியின் இறுதி நிகழ்வு இடம்பெற்ற தினத்தன்று நடைபெற்ற சம்பவத்தால் கொழும்பு தாமரைத் தடாகத்தின் 04 இலட்சம் ரூபா சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேத மதிப்பீடு நடாத்தி, சட்ட மா அதிபரிடம் ஆலோசனையை பெற்று மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.