1000 ரூபா சம்பளம்: வர்த்தமானி மீதான தீர்ப்பு 5 ஆம் திகதி

by Bella Dalima 31-03-2021 | 6:13 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்து அரசாங்கம் வௌியிட்டுள்ள வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு அமைய இடைக்கால தடையுத்தரவை விதிப்பதா, இல்லையா என்பது தொடர்பிலான உத்தரவை எதிர்வரும் 05 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. மேலும் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிப்பது தொடர்பிலான உத்தரவும் அன்றைய தினத்தில் அறிவிக்கப்படவுள்ளது. 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கையை ஆராய்ந்த அரசாங்கம், அவர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதால், மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து, அந்த மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி சுசந்த பாலபட்டபெந்திகே கோரிக்கை விடுத்தார்.