பணியாளர்களுக்கு இலவச தனிமைப்படுத்தல் நடவடிக்கை

கட்டணம் செலுத்தும் இயலுமையற்ற பணியாளர்களுக்கு இலவச தனிமைப்படுத்தல் நடவடிக்கை

by Staff Writer 27-03-2021 | 5:21 PM
Colombo (News 1st) நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள, கட்டணம் செலுத்துவதற்கான இயலுமையற்ற அனைத்து பணியாளர்களையும் இலவசமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கை பணியாளர்களுக்காக இந்த சேவை வழங்கப்படவுள்ளது. பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார். இதற்காக 15 ஹோட்டல்களில் 800 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் COVID தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணியிடம் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் கூறினார். நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வௌிநாடுகளில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய மேலும் குறிப்பிட்டார்.