by Staff Writer 25-03-2021 | 10:29 PM
Colombo (News 1st) உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திற்குள் நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஸ இணங்கியுள்ளதாக யுனெஸ்கோ ஶ்ரீ லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தேச நீர்த்தேக்கங்கள் காரணமாக சிங்கராஜ வனத்தின் சுமார் நான்கு ஹெக்டேயருக்கு பாதிப்பு ஏற்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கிங் கங்கையை மறித்து லங்காகம, மாதுகெட்டே பகுதியில் இந்த நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சர் சமல் ராஜபக்ஸ அண்மையில் வௌியிட்ட கருத்துக்களுக்கு அமைய, இந்தத் திட்டத்தை சீனா நடைமுறைப்படுத்தவுள்ளது.
கிங், நில்வலா கங்கைகளை மறித்து சீனா இந்த இரண்டு நீர்த்தேக்கங்களையும் நிர்மாணித்தால், கீழ் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீரை விநியோகிப்பது தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொள்ளும் இயலுமை அவர்கள் வசமாகும் அல்லவா?
சீனா கங்கைகளை மறித்து நீர்த்தேக்கம் அமைத்து நீர் விநியோக கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது மூலம் நாடுகளை தமது பொறிக்குள் சிக்கவைக்கின்றமை தொடர்பில் அண்மையில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.
தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் சீனாவின் பொறியில் சிக்கி வருவதாக ஹார்வட் சர்வதேச கற்கை நிறுவனம் பகிரங்கப்படுத்திய ஆய்வறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி நியூஸ்ஃபெஸ்ட் செய்தி வௌியிட்டது.
ஏற்கனவே திபெத்திய பள்ளத்தாக்கிலிருந்து தொடங்கும் பிரம்மபுத்ரா, இரவாடி மற்றும் மீகோம் நதிகளுக்கு குறுக்கே அணைக்கட்டுகளை அமைத்து சீனா இந்த செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது.