சிறுவர் துஷ்பிரயோகங்களை முறையிடுங்கள்

நாளைய தலைமுறையினரை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதை மறவாதீர்கள்!

by Bella Dalima 27-02-2021 | 5:11 PM
Colombo (News 1st) பாடசாலை கல்வியைப் பெற்று எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள வேண்டிய சிறுவர்களின் வாழ்வில் துன்பியல் சம்பவங்கள் நடந்தேறுகின்றமை சர்வதேச நாடுகள் எதிர்நோக்கும் துரதிர்ஷ்டம் என கூறலாம். இலங்கையில் கடந்த வருடம் 8000-இற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வருடாந்த தரவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் கணிசமானளவு சம்பவங்கள் பதிவாகியுள்ளமையை அறிக்கையினூடாக அவதானிக்க முடிகின்றது. நாட்டில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த 1929 என்ற துரித தொலைபேசி இலக்கம் பயன்பாட்டிலுள்ளது. மும்மொழிகளிலும் வாரத்தின் எந்தவொரு தினத்திலும் எந்த நேரத்திலும் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் “1929” இலக்கத்திற்கு மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகள் இலவசமாகும். உங்கள் பிரதேசத்தில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் ஏதேனும் பதிவாகுமாக இருந்தால், உடனடியாக 1929 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்யுங்கள். நாளைய தலைமுறையினரை ஆபத்தான நிலைகளில் இருந்து மீட்கும் பாரிய பொறுப்பும் கடமையும் சமூகம் என்ற வகையில் அனைவருக்கும் உரியதாகும்.