இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்; நேற்று 14,866 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

by Staff Writer 26-02-2021 | 8:25 PM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் COVID-19 தொற்று அதிகமாகக் காணப்படும் அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அபாயப் பகுதிகளை அடையாளம் காணுமாறு குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து நேற்று கொண்டுவரப்பட்ட 5 இலட்சம் Oxford-Astrazeneca Covishield தடுப்பூசிகள் இன்று முதல் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. நேற்று 14,866 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதுடன் நேற்றிரவு வரை 3,93,469 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் வழங்கப்படுவது தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்படும் வயதெல்லை குறித்து சுகாதார தரப்பினரிடம் இதுவரை உறுதியான நிலைபாடு இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் COVAX திட்டத்தின் கீழ், நாட்டிற்கு வழங்கப்படவுள்ள முதலாவது தடுப்பூசித் தொகை நாளை மறுதினத்திற்கு முன்னர் கிடைக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முதல் கட்டத்தின் கீழ், 2,64,000 தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். COVAX திட்டத்தின் கீழ், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 4.5 மில்லியன் COVID தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.