சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி: G.L.பீரீஸ்

by Bella Dalima 25-02-2021 | 5:01 PM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை சுகாதார பாதுகாப்புடன் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் G.L.பீரீஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். முன்னாயத்த நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் தலா இரண்டு விசேட பரீட்சை நிலையங்களை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார். நாடளாவிய ரீதியில் 4,513 நிலையங்களில் பரீட்சை நடத்தப்படவுள்ளது. மேலதிக பரீட்சை நிலையங்களை ஸ்தாபிப்பதற்காக மாகாண ரீதியில் 500 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். இம்முறை தாமதமாகி பரீட்சை நடத்தப்படுகின்றமையால், எதிர்வரும் ஜுன் மாதம் பெறுபேறுகள் வௌியிடப்படும் எனவும், ஜூலை மாதம் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் சுட்டிக்காட்டினார். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6,20,352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் கிடைக்காத பரீட்சார்த்திகள் doenets.lk என்ற இணையதள முகவரிக்குள் பிரவேசித்து தங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக அனுமதிப்பத்திரத்தில் காணப்படும் தவறுகளை பரீட்சார்த்திகள் திருத்திக்கொள்ள முடியும் என அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. எனினும், ஒரு தடவை மாத்திரமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.