உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

by Staff Writer 17-02-2021 | 8:09 PM
Colombo (News 1st) அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இன்று Brent சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 63.71 அமெரிக்க டொலராக இருந்தது. அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 60.37 டொலராக அதிகரித்திருந்தது. இந்த வருடத்தில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 22 வீதத்தால் அதிகரித்துள்ளது. COVID தொற்று காரணமாக கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 38 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைந்தது. மே மாதத்திலிருந்து உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர ஆரம்பித்ததுடன், நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் ஒரு பீப்பாயின் விலை 40 அமெரிக்க டொலர் வரை குறைந்த வேகத்தில் அதிகரித்தது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்தமை மற்றும் உள்நாட்டில் கொரோனா தொற்று நிலைமை காரணமாக எண்ணெய்க்கான கேள்வி குறைந்ததால், பெட்ரோலிய இறக்குமதிக்காக 2019 ஆம் ஆண்டு செலவிடப்பட்ட தொகையை விட சுமார் 1350 அமெரிக்க டொலரை 2020 ஆம் ஆண்டு சேமிக்க முடிந்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் மொத்த இறக்குமதி செலவீனம் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 3881.7 மில்லியன் அமெரிக்க டொலர் குறைவடைந்துள்ளதுடன், அதில் 35 வீத பங்களிப்பு பெட்ரோல் மூலம் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சுமார் 50 அமெரிக்க டொலர் பெறுமதி நிலவிய மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் தற்போது 62 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதால், இதுவரை எண்ணெய் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற சாதகத்தன்மை குறைவடையும் நிலை உருவாகியுள்ளது. எனினும், உலக சந்தையில் விலை மாற்றம் ஏற்பட்டாலும் பெட்ரோல் விலையை ஸ்திரமான நிலையில் வைத்திருப்பதென்ற கொள்கையுடன் அரசாங்கம் உள்ளது. கடந்த சில நாட்களில் எண்ணெய் விலை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், பெட்ரோல் விலையை உயர்த்தாமல், அதனை தற்போதைய விலையிலேயே விற்பனை செய்வதற்காக அரசாங்கம் அறவிடும் வரியைக் குறைக்கும் படி கோரிக்கை விடுத்ததாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார்.