புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம்

by Bella Dalima 13-02-2021 | 8:24 PM
Colombo (News 1st) பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் COVID-19 வைரஸின் புதிய வகை இலங்கையிலும் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் இலங்கைக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? இது தொடர்பாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகேவுடன் Zoom தொழில்நுட்பம் ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. சில இடங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாரியளவில் இல்லை. எனினும், முன்னைய வைரஸை விட இதற்கு வேகமாகப் பரவும் இயலுமை இருப்பதாக பல நாடுகள் தெரிவிக்கின்றன என நீலிகா மலவிகே தெரிவித்தார். இந்த புதிய வகை வைரஸ் உள்நாட்டில் உருவாவதற்கான வாய்ப்புள்ள போதும், வௌியில் இருந்தே வந்திருக்க முடியும் என தாம் கருதுவதாக நீலிகா மலவிகே கூறினார். இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் தவறுதலாக பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். புதிய வகை COVID வைரஸ் கொழும்பு, அவிசாவளை, பியகம, வவுனியா ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதால், அங்கு மாத்திரமே தொற்று இருப்பதாக அர்த்தப்படாது. இந்த வைரஸ் தொடர்பான தேசிய வேலைத்திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார். மேலும், தற்போது இனங்காணப்பட்டுள்ள வைரஸ் தவிர மேலும் பல வகையான வைரஸ்கள் நாட்டில் பரவியிருக்கின்றனவா, இல்லையா என்பதை தற்போதைக்கு கூற முடியாது எனவும் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.