by Staff Writer 09-02-2021 | 1:11 PM
Colombo (News 1st) தம்மை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன விடுத்த அறிவிப்புக்கு அமைச்சர் விமல் வீரவங்ச பதில் வழங்கியுள்ளார்.
நீர்கொழும்பில் இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்காக நுகேகொடையில் பெப்ரவரி 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பேரணிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவராக செயற்பட்டமை தவறு என்றால், பொதுமக்களிடம் தான் மன்னிப்பு கோருவதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
அதேபோல கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வேண்டும் என கூறி, அதனை யதார்த்தமாக வெற்றி பெற செய்தமை தவறென்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.
கூட்டமைப்பில் காணப்படும் பெரும் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இதனை கூறினேனே தவிர மஹிந்த ராஜபக்ஸ தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் என அது பொருள்படாது.
மஹிந்த ராஜபக்ஸ தலைவராக செயற்படும் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் கட்சியில் உயர் பதவி ஒன்றை வழங்கினால் தற்போதைய அரசியல் பலம் மேலும் வலுவடையக்கூடும் என்பதோடு, அரசாங்கத்தின் நகர்வு மற்றும் நாட்டிற்கு அது சிறந்ததாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
வேறு கட்சியில் உள்ளார் என்பதற்காக ஏனைய கட்சிகளை விமர்சிக்க முடியாது என சட்டம் இல்லை என கூறிய அமைச்சர் விமல் வீரவங்ச, அரசியலமைப்பிலும் கருத்து சுதந்திரம் வரையறுக்கப்படவில்லை. அவ்வாறெனின், UNP, JVP தொடர்பில் கதைக்க முடியாது என்றார்.
தமது கூட்டமைப்பிற்குள் காணப்படும் ஏனைய கட்சிகள் தொடர்பிலும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் இதில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது எனவும் அது ஒவ்வொருவரும் உருவாக்கிக் கொண்ட கீழ்தரமான வரையரைகள் எனவும் கூறினார்.
சிறு பிள்ளைகள் சில சந்தர்ப்பங்களில் பொருட்களை குழப்புவார்கள். அதுகுறித்து கவலையடைய தேவையில்லை என்றார்.
தமது கட்சியைச் சேர்ந்த 2 வைத்தியர்கள் அல்லது வேறு எவருக்கேனும் வௌிநாட்டு புலனாய்வு பிரிவினருடன் தொடர்பிருந்தால் விசாரணை நடத்துமாறும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் நான் கேட்டுக் கொள்வதாக கூறினார்.
முதலில் குற்றச்சாட்டை முன்வைத்தவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து, பின்னர் வைத்தியர்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவ்வாறான தொடர்புகள் காணப்படுமாயின் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இவை தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச இதன்போது தெரிவித்துள்ளார்.