by Staff Writer 06-02-2021 | 8:31 PM
Colombo (News 1st) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணி இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
பேரணி இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமானதுடன், இந்த போராட்டத்திற்கு வவுனியாவில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது ஆதரவை வழங்கினர்.
நேற்று (05) திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தை அடைந்திருந்தது.
இன்று காலை வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம், மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக ஹொரவப்பொத்தானை நோக்கி பயணித்தது.
வவுனியாவில் கடந்த நான்கு வருடங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்களின் பந்தலுக்கும் பேரணி சென்றது.
பேரணி வவுனியா பெரிய பள்ளிவாசலை சென்றடைந்த போது, அங்கிருந்த மக்கள் பேரணியுடன் இணைந்து பயணித்தனர்.
ஹொரவப்பொத்தானை வீதியை சென்றடைந்த பேரணி பண்டாரவன்னியன் சிலையடியில் முற்றுப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி வவுனியாவிலிருந்து மன்னாருக்கு பயணித்தது.
பிரதான வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பல்வேறு தடைகளையும் கடந்து மன்னார் நகரை அடைந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பேரணி மன்னார் குஞ்சுக்குளம் பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டளை வாசிக்கப்பட்டதன் பின்னர் மன்னாருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதான பாலத்திலிருந்து மன்னார் நகர பகுதியிலுள்ள தந்தை செல்வா சிலை வரை ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் சர்வ மதத்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியில் மன்னார் மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்களும் பங்கேற்றனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி யாழ் மன்னார் பிரதான வீதியூடாக வௌ்ளாங்குளம் நோக்கி பயணித்தது.
இதனிடையே, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டும் விழிப்புணர்வு செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பேரணி நாளை (07) யாழ்ப்பாணத்தில் நிறைவு பெறவுள்ள நிலையில், பொதுமக்களின் ஆதரவை மேலும் திரட்டும் வகையில் யாழ் - மருதனார்மடம் சந்தையில் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.