by Staff Writer 04-02-2021 | 9:08 PM
Colombo (News 1st) இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்திற்கு அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.
இலங்கை மக்களுக்கு சுபீட்சமும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்து அனுப்பியுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
சீன பிரதமர் Li Keqiang தனது வாழ்த்துச் செய்தியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ளார்.
ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டவாட்சி மற்றும் சகலருக்குமான சம நீதி பாதுகாக்கப்படுவதன் ஊடாகவும் அவற்றை மேம்படுத்துவதன் ஊடாகவுமே பொதுக்கோட்பாட்டுடன் ஜனநாயகம் பேணப்படும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் Antony Blinken கூறியுள்ளார்.
இந்து - பசுபிக் பிராந்தியத்தில் சுபீட்சம் மற்றும் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தும் பங்காளியாகவும், சிறந்த நண்பராகவும் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான வலுவான உறவு இனி வரும் வருடங்களில் மேலும் வலுவடைய பிரார்த்திப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
COVID-19 தொற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடியமை உட்பட இரு நாடுகளுக்கும் இடையில் பேணப்பட்ட ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக பாரத பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.