by Staff Writer 04-02-2021 | 7:56 PM
Colombo (News 1st) இந்திய மத்திய அரசினால் அமுல்படுத்தப்பட்ட புதிய விவசாய சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்திய சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் அதிக தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பதில் குறித்த விவசாய சட்டங்கள் உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதியான ஆர்ப்பாட்டங்கள் வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஒரு அடையாளம் என்றும் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் உரையாடலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 22 ஆம் திகதி மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளிடையே நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தையில் வேளாண்மை சட்டங்களை அமுல்படுத்துவதை ஒத்திவைத்துள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.