by Staff Writer 03-02-2021 | 9:26 PM
Colombo (News 1st) தற்போதைய அரசாங்கம் கிழக்கு முனையம் தொடர்பாக அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவில்லை எனவும் கருத்துப் படிவம் ஒன்றையே சமர்ப்பித்திருந்ததாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எனினும், 2019 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தவிர மூன்று மாதங்களுக்கு முன்னர் அரசாங்கம் நிறைவேற்றிய அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாக செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று முன்தினம் (01) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரத்தில், துறைமுக அதிகார சபை பாரிய நட்டத்தில் இயங்குவதால் அதிலிருந்து விடுபடுவதற்காக கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்கு முதலீட்டாளர் ஒருவர் தேவையென குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வாய்ப்பை பெறும் முதலீட்டாளருக்கான தகுதி இந்தியாவின் Adani Ports and Logistic வர்த்தகக் குழுமத்திற்கு உள்ளதெனவும் அந்த பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதானி வர்த்தகக் குழுமத்தின் சர்வதேச வர்த்தகங்கள் தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தில் விரிவாகக் கூறப்பட்டிருந்தது.
முதலீட்டாளரின் இயலுமை மற்றும் தகுதி தொடர்பாக நீண்ட தௌிவூட்டலின் பின்னர் 2019 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை மீளாய்வு செய்ய பேச்சுவார்த்தைக் குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில், கிழக்கு முனையம் தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம் அறிவிக்கப்படும் போது இராஜதந்திர ரீதியில் இந்திய - இலங்கை உறவுகளுக்கு தாக்கம் செலுத்தும் சில நிகழ்வுகள் நேற்றும் இன்றும் பதிவாகின.
கிழக்கு முனையம் தொடர்பிலான இலங்கையின் தீர்மானம் இந்தியாவிற்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ''தி ஹிந்து'' பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
இதனிடையே, இந்திய மாநிலங்களவையில் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இலங்கையின் வடக்கு கடலில் இலங்கை கடற்படை, தமிழ் நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை கொலை செய்தமையை ஏற்றுக்கொள்ள முடியாதென இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
இந்திய மாநிலங்களவையில் தமிழ் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் தமிழக மீனவர்களின் உயிரிழப்பிற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் குறித்து கேள்விப்பட்டவுடன், இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்துள்ளதாக ''தி ஹிந்து'' பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் நிலைப்பாடு உறுதியாக தெரிவிக்கப்பட்டிருக்கும் என அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் அல்லது மாற்று யோசனை குறித்து இன்னும் இந்தியாவிற்கு தௌிவுபடுத்தப்படவில்லை என உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள்காட்டி ''தி ஹிந்து'' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்கும் போது, துணைத் தூதுவர் கே.ஜேகப் பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனையும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனையும் தனித்தனியே சந்தித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபைகள் பூரணமாக நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராஜதந்திரிகள் அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Akira Sugiyama வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை பாதித்துள்ள விடயங்கள் குறித்து இதன்போது நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வௌிவிவகார அமைச்சின் ட்விட்டர் தகவலில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz நேற்று வௌிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார்.