by Staff Writer 25-01-2021 | 7:36 PM
Colombo (News 1st) நீதிமன்றம் சட்டத்தின் உதவியை தேடும் மக்கள் இல்லமாக மாற வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நீதிமன்ற கட்டட தொகுதியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனை கூறியுள்ளார்.
ஒரு நாடு, ஒரு சட்டத்திற்கான தேசிய நலனை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முன்நின்று செயற்படுவதாக தெரிவித்த பிரதமர், சட்ட தாமதங்களை தவிர்க்கவும் பிரச்சினைகளை திறம்பட தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் ரீதியாக எத்தகைய கொள்கையை கொண்டிருந்தாலும் இறையாண்மை நாட்டு மக்களிடமே காணப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்கள், இன்னும் காலாவதியான சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், இந்த அழுத்தத்திலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பு காணப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், தற்போதுள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, அவற்றை சமரச குழுவால் தீர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்கு விசாரணைகளின் தாமதம் மக்கள் மீதான பெரும் சுமையாக காணப்படுவதாகவும் சிலர் தமது வாழ்நாள் முழுவதிலும் வழக்கு நடவடிக்கைகளை தொடரும் நிலை காணப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிலர் வழக்கு தீர்ப்பு கிடைக்கும் முன்னரே, இறக்கும் நிலையை எதிர்கொண்ட சந்தர்ப்பங்கள் பல காணப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக, இன்று (25) அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சியின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டுமென்பதே தமது நிலைப்பாடென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
காலணித்துவ காலத்தில் கட்டப்பட்ட புதுக்கடை நீதிமன்ற கட்டட தொகுதிக்கு பதிலாக தற்போது கட்டப்படும் புதிய நீதிமன்ற வளாகம் 06 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படுகின்றது.
3 வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக 16,500 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.