Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் கீழ், எமது நாட்டின் 100 வீத உரிமத்துடன் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி மதத் தலைவர்கள், தொழிற்சங்கத்தினர், சிவில் மற்றும் அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மக்களுடன் இணைந்து ஒன்றிணைந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
18 மீட்டருக்கும் மேல் ஆழமான இந்த முனையம், உலகின் பாரிய கொள்கலன் போக்குவரத்துக் கப்பல்களுக்கு மிகவும் வசதியானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் 85 வீதம் சீன நிறுவனமொன்றினால் நிர்வகிக்கப்படுவதுடன், கிழக்கு முனையத்துடன் இணைந்த SAGD முனையம் பன்னாட்டு நிறுவனங்களின் அதிகப் பங்குகளைக் கொண்ட நிறுவனமொன்றினால் நிர்வகிக்கப்படுகிறது.
தற்போது துறைமுக அதிகார சபையினால் நிர்வகிக்கப்படும் "ஜய" கொள்கலன் முனையத்தில், பாரிய கப்பல்கள் வந்து செல்லக்கூடிய வசதி இல்லை என்பதுடன், கிழக்கு முனையம் இழக்கப்பட்டால் துறைமுக அதிகார சபை இந்தத் துறையில் முன்னெடுப்பதற்கு எதுவும் எஞ்சாது எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், நேற்று வலல்லாவிட்டயில் நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்,
நாம் தற்போது முன்னெடுப்பது முதலீடாகும். இதனை எவருக்கும் வழங்குவதில்லை. எமது நாட்டில் நிறுவனமொன்றை உருவாக்குவோம். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இலங்கை நிறுவனம். அவ்வாறான, வேறு பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்த பல நிறுவனங்கள் உள்ளன. அவ்வாறான நிறுவனத்தை உருவாக்கி, பங்குச்சந்தையில் அதனை இணைத்தவுடன் 51 வீத பங்கு துறைமுக அதிகார சபைக்குரியதாக அமையும். எஞ்சிய 49 வீதத்தில் இந்திய நிறுவனத்திற்கு ஒரு பங்கும், ஜப்பான் நிறுவனத்திற்கு ஒரு பங்கும், இன்னொரு பங்கு இலங்கை நிறுவனத்திற்கும், மற்றொரு பங்கை மேலும் இவ்வாறான நிறுவனங்கள் இருந்தால் அவற்றுக்கும் வழங்குவதற்கு விரும்புகிறோம். அவ்வாறான முதலீட்டு யோசனைத் திட்டத்தையே நாம் தயாரித்துள்ளோம்
என குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, முதலீட்டுத் திட்டத்திற்காக இந்திய நிறுவனம் மற்றும் ஜப்பானுக்கு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா இன்று கெரவலபிட்டியவில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,
கிழக்கு முனையத்தை முதலீட்டுத் திட்டத்திற்கு வழங்குவோம் என்பதை தௌிவாகக் கூறுகின்றேன். திருட்டுத்தனமாக அன்றி வௌிப்படையாகக் கூறுகின்றேன். நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்று, ஒவ்வொருவரின் தேவைக்காகப் பேசுவோர் உள்ளனர். எமது துறைமுகம் தற்போது 25ஆவது இடத்திலுள்ளது. நாம் 13ஆவது இடத்திற்கு வருவோம். கிழக்கு முனையத்தை முதலீட்டுத் திட்டத்திற்காக இந்திய நிறுவனத்திற்கு, ஜப்பானுக்கு வழங்குவோம். இந்தியாவிற்கு மாத்திரமல்ல முதலீட்டுத் திட்டத்திற்காக நாளை அமெரிக்கா கோரினாலும், சீனா கோரினாலும், எவர் கோரினாலும் வழங்குவோம். அப்படிச் செய்தால் மாத்திரமே தொழிற்துறைகள் மேம்படும். ஒவ்வொருவரின் கருத்துக்களுக்குப் பயந்து நாம் தீர்மானங்களை எடுக்க மாட்டோம்