by Bella Dalima 23-01-2021 | 5:54 PM
Colombo (News 1st) திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற MV Eurosun கப்பல், ஹம்பாந்தோட்டை கடலில் குடா ராவணா வெளிச்சவீட்டை அண்மித்த பகுதியில் பாறையில் மோதி விபத்திற்குள்ளானது.
கப்பலின் மீட்புப் பணிகளுக்காக இரண்டு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
விபத்திற்குள்ளான கப்பலில் 18 பேர் உள்ளதாகவும், குறித்த கப்பல் 10 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார்.
லைபீரியாவிற்கு சொந்தமான கப்பல் அபுதாபியிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச்சென்ற போதே ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் இன்று பகல் 2 மணிக்கு நங்கூரமிட திட்டமிடப்பட்டிருந்தது.
கப்பலில் மீட்புப் பணிகளுக்காக விசேட சுழியோடிகள் குழாமினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் கப்பலில் எண்ணெய் கசிவோ, நீர் உட்புகுந்தமை தொடர்பிலோ எவ்வித தகவலும் பதிவாகவில்லை என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.