by Bella Dalima 21-01-2021 | 3:14 PM
Colombo (News 1st) அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல் நாளிலேயே முந்தைய அதிபர் ட்ரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.
அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.
கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சினை உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
கொரோனா நோய்த்தடுப்பு விடயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்தில் முதலில் கையெழுத்திட்டுள்ளார். அதன் பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமான நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டம், கீஸ்டோன் X.L. பைப்லைன் திட்டம் இரத்து உள்ளிட்ட தீர்மானங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை விலக்குதல், மக்களுக்கு பொருளாதார உதவி, ட்ரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளைத் திரும்பப் பெறுதல் போன்றவையும் அவர் கையெழுத்திட்டுள்ள தீர்மானங்களில் அடங்கும்.
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ட்ரம்ப் நிர்வாகத்தின் முந்தைய உத்தரவை மாற்றி, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே அதற்கான தீர்மானத்திலும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.