உயர் நீதிமன்றத்தில் தீ: ஐவர் தொடர்பில் விசாரணை

உயர் நீதிமன்றத்தில் தீ பரவல்: ஐவர் தொடர்பில் விசாரணை

by Staff Writer 12-01-2021 | 3:49 PM
Colombo (News 1st) உயர் நீதிமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட தீ பரவலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய சந்தேகநபர்கள் ஐவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவல் தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளும் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத்தில் வீசப்பட்ட சிகரெட்டில் இருந்தே தீ பரவியதாகக் கூறப்படுவதை மறுக்க முடியாது என அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீ பரவல் எரிபொருள் அல்லது மின் ஒழுக்கினால் ஏற்படவில்லையென உறுதியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற கட்டடத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், உயர் நீதிமன்ற வளாகத்தில் இரகசியமாக புகைபிடித்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். உயர் நீதிமன்ற கட்டடத்தில் சிதைவடைந்த பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் 15 ஆம் திகதி தீ பரவியது. களஞ்சியம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தீ பரவவில்லை.