மாத்தளையில் சிறுத்தை கொலை: பற்களை வைத்திருந்த நால்வர் கைது

by Staff Writer 05-01-2021 | 8:23 PM
Colombo (News 1st) மாத்தளை - ரஜ்ஜம்மனவில் சிறுத்தையொன்று கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மாத்தளை பிரதேச சபைக்குட்பட்ட ரஜ்ஜம்மன நீர்த்தேக்க அணை அருகில் இலங்கைக்கே உரித்தான சிறுத்தையொன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கால்நடை வைத்தியர்களும் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர். 3 அடி உயரமும் 5 1/2 அடி நீளமும் கொண்ட சிறுத்தையே உயிரிழந்தது. உயிரிழந்த சிறுத்தையின் பற்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை தும்கொலவத்த பகுதியை சேர்ந்த 50 வயதிற்கும் மேற்பட்ட நால்வரே கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ரஜ்ஜம்மன அலுவலக அதிகாரி பி.எம்.ஜீ. விஜேகோன் தெரிவித்தார். சந்தேகநபர்களிடமிருந்து சிறுத்தையுடையது என கருதப்படும் 5 பற்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ரஜ்ஜம்மன அலுவலக அதிகாரி மேலும் கூறினார்.