படைப்புழு தாக்கம்: ருவாண்டா குழு இலங்கைக்கு உதவுமா? 

by Staff Writer 02-01-2021 | 9:22 PM
Colombo (News 1st) நாட்டில் 8 மாகாணங்களில் படைப்புழு தாக்கம் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் மாத்திரமே அதன் பாதிப்பு இதுவரை பதிவாகவில்லை. நாட்டில் நிலவும் இந்த நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக ருவாண்டாவிலிருந்து நேற்று (01) இலங்கைக்கு வருகை தந்த நிபுணர்கள் குழு இன்று திரும்பிச்சென்றுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். அந்த நிபுணர்கள் குழாம் அனுராதபுரம் - மஹலங்குளம், சமகிபுர, பஹலகம பகுதியிலுள்ள விவசாயக் காணிகளுக்கு நேற்று சென்று படைப்புழு தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ளனர். படைப்புழு தாக்கம் உலகில் முதற்தடவையாக பதிவான காலத்திலிருந்து ருவாண்டா இதுவரை அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. அங்கு முதற்தடவையாக 2017 ஆம் ஆண்டில் படைப்புழுவின் தாக்கம் பதிவானது. ருவாண்டா அரசாங்கம் அப்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து படைப்புழுவை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்தது. படைப்புழு தொடர்பாக கைத்தொலைபேசியை பயன்படுத்தி தகவல்களை திரட்டியதுடன், படைப்புழுவை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவதற்கு தொழில்நுட்ப நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை தொடர்புபடுத்தி செயற்பட ருவாண்டா அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆரம்ப கட்டத்திலேயே அது சார்ந்த தகவல்களை திரட்டி சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததன் காரணமாகவே அவர்கள் இன்றும் சோளச் செய்கையினை படைப்புழு தாக்கத்திலிருந்து பாதுகாத்துள்ளனர். இலங்கையில் முதற்தடவையாக 2018 ஆம் ஆண்டில் படைப்புழு தாக்கம் பதிவான போது நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினர் பல அணிகளாக வெவ்வேறு மாவட்டங்களுக்கும் சென்று படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய விதம் குறித்து ஆராய்ந்தனர். விவசாய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கிராமிய மட்டத்தில் சரியான தகவல்களைப் பெற்று படைப்புழுவைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ருவண்டா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி அப்போது நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது. எனினும், இதுவரை அது தொடர்பாக நேர்த்தியாக செயற்படாமையால் அதன் தாக்கத்தை இந்நாட்டு விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.