இதுவரை 211 கொரோனா மரணங்கள்

இதுவரை 211 கொரோனா மரணங்கள்: இன்று 311 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்

by Staff Writer 02-01-2021 | 10:24 PM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவானதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு 13, கொழும்பு 12 ஆகிய பகுதிகளிலேயே இந்த கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு -13 ஐ சேர்ந்த 93 வயதான பெண்ணொருவர் வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார். இதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத, 70 முதல் 80 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் மருதானை பொலிஸ் பிரிவில் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு 12 ஐ சேர்ந்த 76 வயதான ஆணொருவர் கொரோனா நோயாளர் என அடையாளங்காணப்பட்டதை அடுத்து, கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார். COVID-19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோயினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேலும் 311 பேர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடை 228 பேரும் சிறைச்சாலைகளிலிருந்து 83 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 44,167 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் 562 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 36,717 ஆக பதிவாகியுள்ளது. 7,242 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.